தலைவரின் 62 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.
ரஜினி புதிதாய் பிறந்த வருடம் இது என்றால் மிகையல்ல. அதனால் அவர் பிறந்த பிறகு வந்து போன இந்த 61 ஆண்டுகளுக்கும் இல்லாத மகத்துவம் இந்த ஆண்டு கிடைத்துள்ளது.அந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் தந்த தெம்புடன் உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் இந்த பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
உலகில் எந்த நடிகருக்காவது இத்தனை பெருமையுடன் ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாடுவார்களா என்றால்… கிடையாது என்று உறுதியாகச் சொல்லலாம். ரஜினி ஒருவருக்கு மட்டுமே சாத்தியமான மகத்துவம் இது.
காரணம், அவரை ஒரு நடிகராக மட்டும் யாரும் பார்ப்பதில்லை. மதம், மொழி, மாநில எல்லைகள், அரசியல் மாச்சரியங்கள் என அனைத்துக்கும் அப்பாற்பட்டவராக ரஜினி பார்க்கப்படுகிறார். ஒவ்வொரு ரசிகரின் குடும்பத்திலும் அவருக்கு ஒரு உறவு இருக்கிறது. சிறு குழந்தைகளின் மாமா, இளம்பெண்கள் – இளைஞர்களின் அண்ணன், வயதானவர்களுக்கு தம்பி, தாய்மார்களின் மகன் என அவருக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறவிருக்கிறது!
இந்த உறவுதான் 36 ஆண்டுகளாக சினிமா வெற்றி தோல்விகளுக்கப்பால் அவரை தமிழ் மண்ணின் முடிசூடா மன்னனாக உலா வர வைத்துள்ளது.
இந்தி சினிமாதான் இந்திய சினிமா என்ற நிலையை மாற்றியவர் ரஜினி. இன்று ரஜினி படம்தான் இந்திய சினிமா என்ற நினைப்பை உலகளாவிய சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பெறச் செய்தவர் ரஜினி. வசூல், வெற்றி, தரம் என எந்த அளவுகோல்படி பட்டியல் போட்டாலும் இந்தியாவின் முதல் பத்து படங்களில் நான்கு ரஜினி நடித்ததாகவே அமைந்திருப்பதைக் காணலாம்.
அமிதாப்பச்சன் சொன்னதுபோல இந்த வெற்றி அவருக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்பதைப் போன்ற ஒரு அபத்தமான வாதம் இருக்க முடியாது.
உலகளாவிய சிறந்த நடிகர்களுள் ஒருவராக ரஜினி இன்று பார்க்கப்படுகிறார். காரணம் அவர் எந்த பாத்திரத்தையும் ஏனோ தானோ என்று செய்ததில்லை. ஆக்ஷன் படம்தானே என்பதற்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், படத்தின் கதைக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்பவர் ரஜினி. அதனால்தான் இந்த யுகத்தின் இளைஞர்களும் வாய்பிளந்து பார்க்கும் வகையில் எந்திரனைத் தந்தார்.
எல்லா நடிகர்களுக்குமே ஒப்பீட்டு அளவுகோல் என்றால் அது ரஜினிதான். தமிழ் சினிமாவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சகாப்தம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சகாப்தம், கமல்ஹாஸன் சகாப்தம் என்று அவரவர் கோலோச்சிய காலகட்டத்தை வைத்து சொல்லலாம். ஆனால் தமிழ் சினிமா சரித்திரம் என்று பார்த்தால் ரஜினிக்கு முன், ரஜினிக்கு பின் என்பது மட்டுமே சரியான காலப் பகுப்பு என்பது ஆய்வாளர்களின் கருத்து.
சினிமா வசூலில் ரஜினி படத்தின் வசூலை குறிப்பிட்ட நடிகரின் படம் மிஞ்சிவிட்டது… அல்லது ரஜினி படத்துக்கு அருகில் நிற்கிறது என்றெல்லாம் சிலர் புள்ளிவிவரங்களை அவிழ்த்துவிடுவார்கள்.
ஒரு படத்தின் வசூல் சாதனையை நிச்சயம் இன்னொரு படம் முறியடித்தே தீரும் என்பது இயற்கையின் நியதி என்றாலும், ஒரு பத்திரிகையாளனாக சொல்கிறேன்… ரஜினியின் பட வசூலுக்கு முன்னால் மற்ற நடிகர்களின் படங்கள் குறைந்தது பத்து இடங்களாவது தள்ளித்தான் நிற்கும். ரஜினி படங்களின் வசூலை அவரது படங்கள் மட்டுமே முறியடித்துள்ளன. இதனை ரஜினி ரசிகன் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் சொல்லவில்லை.
ஒரு விநியோகஸ்தர் இதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார். சந்திரமுகி வசூல் ரூ 100 கோடி என்றால், இதற்கு அடுத்த இடத்தில் அதிக வசூல் பெற்றதாகக் கூறப்படும் வேறு நடிகரின் படம் மிஞ்சிப் போனால் ரூ 30 கோடி வசூலித்தாலே பெரிய சாதனைதான். ஆனால் இந்த அளவீட்டை மட்டுமே வைத்துக் கொண்டு சந்திரமுகிக்கு அடுத்து என் படம்தான் என்று ஒரு நடிகர் அல்லது படத்தின் தயாரிப்பாளர் சொல்வது எத்தனை அபத்தமானது!
சிவாஜி தி பாஸ், எந்திரன் பக்கமெல்லாம் இப்போதைக்கு எந்தப் படமும் வரமுடியாது என்பதால் சந்திரமுகியை உதாரணத்துக்கு குறிப்பிடுகிறேன்.
ரஜினி என்ற பெயர் வெறும் சினிமா படங்களோடு நின்றுவிடுவதில்லை. அந்தப் பெயர் ஒரு விற்பனை மந்திரம். ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே வைத்து பஞ்ச் தந்திரம் என்ற பெயரில் புத்தகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி என பெரிய அளவு வருவாய் ஈட்டியவர்களுக்குத் தெரியும் இந்தப் பெயருக்குள்ள மகத்துவம்.
வட இந்தியாவில் ஏதாவது ஒரு வகையில் ரஜினி பெயரை வைத்து பிரபலமடைய அல்லது பணம் சம்பாதிக்க முடியுமா என்றுதான் பார்க்கிறார்கள். ரா ஒன் அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
தனது பத்திரிகை நன்றாக விற்க வேண்டும் எனில், ஒரு ரஜினி கட்டுரை இருக்க வேண்டும் என்பதை பத்திரிகைகள் உணர்ந்துள்ளன. அது பாராட்டாகவும் இருக்கலாம், கடும் விமர்சனமாகக் கூட இருக்கலாம். ரஜினி பற்றிய செய்தி – கட்டுரை இருந்தால் விற்பனையில் அது சூப்பர் ஹிட். இதற்கு சமீபத்திய உதாரணம் இந்தியா டுடே ரஜினி ஸ்பெஷல்.
எந்திரன் படத்தின் முதல் செட் ஸ்டில்கள் தாங்கி வந்த தினகரன் கூடுதலாக 4 லட்சம் பிரதிகள் ஒரே நாளில் விற்பனையானதாக அதன் மேலாளர் முன்பு கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இனி, தான் செய்யும் எந்த விஷயமும் தமிழர்களை பெருமைப்படுத்துவதாக இருக்கும் என்பது ரஜினி அடிக்கடி கூறும் விஷயம். அவர் புதிதாக என்ன செய்யப் போகிறார் என்பது நமக்குத்தெரியாது. ஆனால் இதுவரை அவர் செய்த அனைத்துமே தமிழர்களுக்கு பெருமை தருவதாகவே அமைந்துள்ளன. தமிழ் சினிமா உலக சந்தையில் உயர்வான இடத்தைப் பிடித்துள்ளது என்றால் அது ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரால்தான்.
தமிழருக்கும் தமிழ் கலையுலகுக்கும் பெருமை தரும் ஒப்பற்ற கலைஞன், மனிதருள் மாணிக்கம் ரஜினி இன்னும் பல்லாண்டு வாழ்ந்து, இன்னும் பல பெருமைகளைச் சேர்க்க அவர் பிறந்த இந்த நன்னாளில் வாழ்த்துவோம்!
Ever Seen Photos of Superstar
-
No comments:
Post a Comment