கருத்துப் பிழைகள், வார்த்தைப் பிழைகளுடன் அச்சடிக்கப் பட்டுள்ள, மூன்று லட்சம் வினா - விடை புத்தகங்களை, விரைவில் விற்பனை செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது; இதனால், மாணவர்கள் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும், மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, பாட வாரியாக வினா - விடை புத்தகங்களை, ஆசிரியர் குழுக்கள் மூலம் தயாரித்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. நடப்பு ஆண்டில், 10ம் வகுப்பிற்கு சமச்சீர்கல்வி திட்டம் அமலாகியதை அடுத்து, பல்வேறு முதல் கட்ட திருத்தப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இதனால், புத்தகங்களை அச்சிடுவதில் கால தாமதம் ஏற்பட்டதையடுத்து, திட்டமிட்டதை விட மிகக் குறைவாக, மூன்று லட்சம் வினா - விடை புத்தகங்கள் அச்சிடப் பட்டன.
பிழையுடன் அச்சடிப்பு : தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களை உள்ளடக்கி ஒரு புத்தகமாகவும், கணிதப் பாடத்திற்கான தீர்வுப் புத்தகம் தனியாகவும் அச்சடிக்கப் பட்டுள்ளன.
"அச்சடிப்பு பணிகள் முடிந்து விட்டதால், விரைவில் புத்தகங்கள் வரத் துவங்கும்,' என, பெற்றோர்-ஆசிரியர் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களில் உள்ள பல்வேறு குறைகள் மற்றும் தவறுகளை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் சரிசெய்து, அதற்கான, "சிடி'க்களை, சமீபத்தில் தான், பாடநூல் கழகத்திடம் வழங்கியது. இதற்கு முன்பே அச்சிடும் பணிகள் தொடங்கிவிட்டதால், பிழைகளுடன் கூடிய புத்தகங்கள் அச்சிடப் பட்டுள்ளன.
குறைவு தான்? : பெற்றோர்-ஆசிரியர் கழக வட்டாரங்கள், இது குறித்து கூறுகையில், "பாடப் புத்தகங்களில் இருந்து, பல பகுதிகள் நீக்கிய பிறகே, வினா - விடை புத்தகங்கள் அச்சடிக்க, ஆர்டர் தரப்பட்டன. சிறிய அளவில் தவறுகள், பிழைகள் இருக்கலாம்; அதனால், மாணவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. புத்தகங்களின் விலை இன்னும் முடிவு செய்யவில்லை; எனினும், 200 ரூபாய்க்குள் இருக்கும்' என்றனர்.
பாதிப்பு ஏற்படும் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, மூன்று மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் அச்சடித்த புத்தகங்களை விற்பனை செய்து முடித்திட, பெற்றோர்-ஆசிரியர் கழகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, தலை கிறுகிறுக்கும் அளவிற்கு, பத்தாம் வகுப்பு மாணவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், பிழைகளுடன் கூடிய புத்தகங்களை, துறையே விற்பனை செய்தால், அதனால் தேர்வில் மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்படலாம்.
No comments:
Post a Comment