சென்னை, மார்ச்.22-
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு போட்டித்தேர்வு கிடையாது. தற்போது இருக்கின்ற நடைமுறையையே பின்பற்ற அரசு முடிவு செய்துள்ளது
உதவி பேராசிரியர் நியமனம்
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு ஆசிரியர் நியமனத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பதிவுமூப்பு முறை ரத்து செய்யப்பட்டு போட்டித்தேர்வு முறை மீண்டும் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதன்படி, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை போட்டித்தேர்வு மூலமாக நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான விண்ணப்ப படிவங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களையும், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி இடங்களையும் போட்டித்தேர்வு மூலமாக நிரப்புவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பட்டதாரி ஆசிரியர்களும் போட்டித்தேர்வு மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்த பணிக்கு, இலவச கட்டாய கல்விச் சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித்தேர்வும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
போட்டித்தேர்வு கிடையாது
தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் வழங்கப்படுகின்றன. அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர், என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனங்கள் அனைத்தும் போட்டித்தேர்வு மூலமாக நடத்தப்படுவதால் அவற்றைப் போலவே அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு போட்டித் தேர்வு முறைதான் பின்பற்றப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்திற்கு தற்போது இருக்கின்ற நடைமுறையை பின்பற்றுவது என்று அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய நடைமுறையின்படி, போட்டித்தேர்வு இல்லாமல் பணி அனுபவம், உயர்கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு ஆகியவற்றுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
தற்போதைய நடைமுறை அமல்
மொத்த சிறப்பு மதிப்பெண் 34 ஆகும். அதில் பணி அனுபவத்திற்கு ஆண்டுக்கு 2 மார்க் வீதம் அதிகபட்சம் 71/2 ஆண்டுகளுக்கு 15 மார்க், பி.எச்டி. முடித்திருந்தால் 9 மார்க், எம்.பில். படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தேர்ச்சி பெற்றிருப்பின் 6 மதிப்பெண். வெறும் முதுநிலை படிப்புடன் ஸ்லெட் அல்லது தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மார்க். உயர்கல்வித்தகுதியில் ஏதாவது ஒரு பிரிவின்கீழ் மட்டுமே மதிப்பெண் பெறலாம். நேர்முகத்தேர்வுக்கு 10 மார்க் ஆக மொத்தம் 34 மதிப்பெண்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1093 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த காலி இடங்கள் அனைத்தும் மேற்கண்ட சிறப்பு மதிப்பெண் முறை அடிப்படையில்தான் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment