About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

April 2, 2012

நாடு முழுவதும் ஏப். 20ல் ஜாதி வாரி கணக்கெடுப்பு துவக்கம்


நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு ஏப்ரல் 20ம் தேதி தொடங்குகிறது. இதற்காக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கையடக்க கணினி வழங்கப்படுகிறது. கணக்கெடுப்பு பணிக்காக அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் கணக்கெடுப்பு துவங்குகிறது. 40 நாள் நடைபெற உள்ள கணக்கெடுப்பு பணியில் கணக்கெடுப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், மாஸ்டர் டிரெய்னர்ஸ் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னையில் பயிற்சி 
மாஸ்டர் டிரெய்னர்களுக்கு சென்னை மறைமலை நகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படும். பின்னர். மாஸ்டர் டிரெய்னர்ஸ் கணக்கெடுப்பாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். கணக்கெடுப்பில் குடியிருப்பாளர்களின் அனைத்து விவரங்களையும் பெறும் வகையில், கேள்வி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புக்கு செல்வோருக்கு உதவியாக கையடக்க கம்ப்யூட்டருடன் (டேப்ளட் பிசி) அதை இயக்கவும் உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொதுமக்கள் அளிக்கும் பதில்களை உதவியாளர்கள் உடனுக்குடன் பதிவு செய்வர்.

காகிதத்தில் குறிக்க வேண்டியதில்லை. இந்த பதிவுகள் அனைத்தும் உடனே சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தலைமை கணக்கெடுப்பு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்காக தேசிய தகவல் மையம் சார்பில் இணையதள வசதியும் செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுத்த பின் அடுத்த நாள் கண்காணிப்பாளர்கள் அப்பகுதிக்கு சென்று விவரங்களை சரிபார்ப்பார்கள். கணக்கெடுப்பு நடத்திய வீடுகளின் முகப்பில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். எனவே கணக்கெடுப்பு அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தினமும் பணிக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.

ரூ.15000 சம்பளம் 

கணக்கெடுப்புக்குத் தேவையான கையடக்க கம்ப்யூட்டர், ஸ்டிக்கர், அட்டை உள்ளிட்ட டூல் கிட்ஸ் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான பணி நியமன உத்தரவு ஆகியவை வரும் 15ம் தேதி வழங்கப்படும். கடந்தாண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இக்கணக்கெடுப்பிற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். 40 தினங்களில் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது. வீடுகளில் வசிப்பவர்கள் கூறும் தகவலின் அடிப்படையில் சாதி, பொருளாதார கணக்கெடுப்பு விவரங்கள் தெரிய வரும். இதனடிப்படையில் மக்களின் பொருளாதார வசதியை அறிந்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்க உதவும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: