About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

June 26, 2012

தனியார் கல்லூரிகளில் பி.எட் : கல்விக் கட்டணம் விரைவில் அறிவிப்பு

தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான கல்விக் கட்டணம் குறித்து நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 647 தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு ஏறத்தாழ 2,500 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருவதால், பி.எட். படிப்பில் மாணவ-மாணவிகள் போட்டிப் போட்டு சேருகிறார்கள். தற்போது போட்டித்தேர்வு முறை வந்துவிட்டதால் பி.எட். படிப்புக்கு மவுசு மேலும் கூடிவிட்டது.
அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மிகக்குறைந்த பி.எட். இடங்களே இருப்பதால், பட்டப் படிப்பில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே அங்கு இடம் கிடைக்கிறது. பெரும்பாலான மாணவ-மாணவிகள் பி.எட். படிப்பதற்கு தனியார் சுயநிதி கல்லூரிகளைத்தான் நாடுகிறார்கள்.
தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து அவர்களின் கோரிக்கைகளையும், கேட்டறிந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், தனியார் கல்லூரிகளில் பி.எட். கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க அரசு முடிவு செய்துள்ளது.
கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், எவ்வளவு கல்விக்கட்டணம்? என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments: