பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த நிதியாண்டை விட, 1,219.16 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த நிதி ஒதுக்கீட்டில், திட்டங்களுக்கு மட்டும், 1,900 கோடி ரூபாய் செலவழிக்கப் படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, முந்தைய தி.மு.க., ஆட்சியில் தான், 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது. அதன்பின், இந்த ஆட்சியிலும், நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த பட்ஜெட்டின் முக்கிய திட்டங்கள்:
நிறைவேறியவை: நூறு மேல்நிலைப் பள்ளிகளுக்கு லேப் கருவிகள், 100 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நூலக வசதிகள், 100 உயர்நிலைப் பள்ளிகளுக்கு அறிவியல் சாதனங்கள், மேல்நிலைப் பள்ளிகளில் மொழி ஆய்வகங்கள், 1,353 நூலகர்கள் நியமனம், அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இணையதள வசதி மற்றும் 498 கோடி ரூபாய் செலவில் உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் (312.13 கோடி ரூபாய், மாணவர்கள் பெயரில் நிதி வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.) உட்பட பல்வேறு திட்டங்கள், கடந்த நிதியாண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேறாதவை: கல்வி முறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைப்பு, டி.பி.ஐ., வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைப்பு உள்ளிட்ட சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நடைபெறும் பணிகள்: மாணவர்களுக்கு, அவர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய, "ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டம், 14 ஆயிரத்து 377 புதிய ஆசிரியர்கள் நியமனம், எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள், சமச்சீர் கல்வி திட்டத்தில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் அச்சடிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
No comments:
Post a Comment