தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு சலுகைகள் எப்போது?
- ஒரே கல்வித் தகுதி, ஒரே சம்பளம், ஒரே பணி, ஒரே தேர்வு முறை என அனைத்தும் ஒன்றாக இருந்தும், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள்ள பதவி உயர்வு வாய்ப்புகள், தொடக்க கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சுத்தமாக இல்லை.
- இந்தப் பிரச்னைக்கு, பட்ஜெட் கூட்டத்தொடரில் விடிவு காலம் பிறக்குமா என, தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும், 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
- முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில்(2001-06), ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு மூலம், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும், தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும் நியமிக்கப்பட்டனர்.
- துறைகள் இரண்டாக இருந்தாலும், பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் தேர்வுமுறை ஒன்றுதான்; கல்வித் தகுதி மற்றும் சம்பளமும் ஒன்றுதான். பணியும் ஒன்றுதான். ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அதிகமான பள்ளிகள் இயங்கி வருவதால், குறிப்பாக மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருவதால், முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு, மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு, பணிமூப்பு அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு என, வரிசையாக பல பதவி உயர்வு வாய்ப்புகள் இங்கே இருக்கின்றன.
- ஆனால், தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் அதே பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒரு பதவி உயர்வு கூட கிடையாது. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகின்ற ஒரு வாய்ப்பு இருந்தாலும், சமீப காலமாக நடுநிலைப் பள்ளிகள் அனைத்தும் கொத்து, கொத்தாக உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
- நடப்பாண்டில் மட்டும், 710 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. ஆனால், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை வெறும், 65 தான். அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும்போது, அந்தப் பள்ளியும், அதில் பணிபுரியும் ஆசிரியர்களும், அப்படியே பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடுகின்றனர்.
- ஆசிரியரின் ஒட்டுமொத்த பணிக்காலத்தையும் கணக்கில் கொள்ளாமல், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் சம்பந்தப்பட்ட நடுநிலைப் பள்ளி எந்தத் தேதியில் வந்ததோ, அந்த தேதியில் இருந்துதான், பட்டதாரி ஆசிரியர்களுக்கான சீனியாரிட்டியும் ஆரம்பிக்கும்.
- நடுநிலைப் பள்ளியாக இருந்த காலத்தில் பணியாற்றியதை கணக்கில் கொள்வதில்லை. இதனால், இவர்களுக்கு, பள்ளிக் கல்விக்கு மாறியும் பிரயோஜனம் இல்லாத நிலை! இந்தப் பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வான அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஒருங்கிணைந்த சீனியாரிட்டியை கணக்கிட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது, தொடக்க கல்வித்துறையில் தற்போதுள்ள, 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment