பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:
- தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி ஆகியவை சிறப்புடன் செயல்பட, நடப்புக் கல்வியாண்டில், 14 ஆயிரத்து 349 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
- மாணவர்கள் நலத் திட்டங்கள் மற்றும் பள்ளிகளின் அலுவலகப் பணிகள் செம்மையாக நடப்பதற்காக, காலியாக உள்ள 6 ஆயிரத்து 786 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும், நடப்புக் கல்வியாண்டில் நிரப்பப்படும்.
- மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 64 விரிவுரையாளர் மற்றும் 24 நூலகர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
- சிறுபான்மை மொழிப் பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு, இதுவரை உதவி துவக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, நிர்வாக வசதியை மேம்படுத்தவும், மொழிப் பள்ளிகளின் தரத்தை கண்காணிக்கவும், இரு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (மலையாளம்) பணியிடங்கள் புதிதாகத் தோற்றுவிக்கப்படும்.
- காலியாக உள்ள 40 உதவி துவக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்படும்.
- அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, நூலகங்களின் தரத்தினை உயர்த்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்து நூலகங்கள் வீதம்160 பகுதிநேர நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்களாகவும், 96 ஊர்ப்புற நூலகங்கள், கிளை நூலகங்களாகவும் தரம் உயர்த்தப்படும். இதற்காக, 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
- மாவட்ட நூலகங்களின் நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர்களின் பணியை மேம்படுத்த, அவர்களுக்கு மடிக் கணினிகள் அளிக்கப்படும்.
- தமிழகத்தில் எழுத்தறிவு பெறாத வயது வந்தோருக்கு, முதன் முறையாக கணினி வழியாகக் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், வயது வந்தோர் கல்வி மையங்கள் நாற்பது, மாதிரி வயது வந்தோர் கல்வி மையங்களாக தரம் உயர்த்தப்படும். இத்திட்டம், அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மையத்துக்கும், 2.5 லட்சம் வீதம், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், கணினி சார்ந்த கல்வி உபகரணங்கள் வழங்கப்படும். இதன்மூலம், எழுத்தறிவு பெறாத 12,000 பேர் பயன்பெறுவர்.
- தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், மழலையர் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் ஒரே மாதிரியான பாடத் திட்டம் பின்பற்றப்படுகிறது. மேலும், கட்டாய கல்வி உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதும் உள்ளது. எனவே, அனைத்துப் பள்ளிகளுக்குமான சட்டம் மற்றும் விதிகளை ஆய்வு செய்து, தனியார் பள்ளிகளுக்கு என, பொது சட்டம் மற்றும் விதிகளை வகுக்கவும், ஆலோசனைகளை வழங்கவும், வல்லுனர் குழு அமைக்கப்படும்.
No comments:
Post a Comment