About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

May 19, 2012

தமிழகத்தில் முப்பருவ கல்வி முறை அமல் : கல்வி ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பேட்டி


"தமிழகத்தில், உள்ள அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், ஜூன் முதல் தேதியில் இருந்து, முப்பருவ கல்வி முறையும், தொடர் மதிப்பீட்டு முறையும் அமல்படுத்தப்படும்' என, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தேவராஜன் கூறினார்.

பொள்ளாச்சியில் நடந்த மாநில அளவிலான பயிற்சி முகாமில் பங்கேற்ற பின் நிருபர்களிடம் தேவராஜன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் நடப்பாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களின் பாடச்சுமை, மன சுமையை குறைக்கும் வகையில் முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. ஜூன் முதல் செப்., மாதம் வரை முதல் பருவம், அக்., முதல் டிச., மாதம் வரை இரண்டாம் பருவம், ஜன., முதல் ஏப்., மாதம் வரை மூன்றாம் பருவம் என, கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனி பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சமச்சீர் பாடப்புத்தகத்தில் உள்ள பிழைகள் திருத்தம் செய்யப்பட்டு, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.


இம்முறையில், மாணவர்களின் திறமையை கண்டறிய, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு செய்யப்படுகிறது. இவை மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.

"வளர் அறி மதிப்பீடு - அ' முறையில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் போதே, மாணவர்களின் திறமையை சோதிக்கும் வகையில் கேள்வி கேட்கப்படும். இதற்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

"வளர் அறி மதிப்பீடு - ஆ' முறையில், ஒரு பாடத்தை கற்பித்த பின், தேர்வு போன்று வைக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். இதற்கு 20 மதிப்பெண் என, மொத்தம் 40 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் பருவத்துக்கான தேர்வு முழுவதும் நிறைவு செய்தவுடன் "தொகுத்தறி மதிப்பீடு' செய்து 60 மதிப்பெண் வழங்கப்படும். இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு "கிரேடு' வழங்கப்படும். மதிப்பெண்ணும், கிரேடும் மாணவர்களுக்கு தெரியாமல், நேரடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்படும். மேலும், பாட்டு, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பிற திறமைகளை வெளி கொணரப்பட்டு இதற்கும் மதிப்பெண் வழங்கப்படும்.

தற்போது, ஓராண்டு நடத்தப்படும் பாடங்களுக்கு இரண்டரை மணி நேரம் தேர்வு வைத்து மாணவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. தொடர் மதிப்பீட்டு முறையால், மாணவர்களுக்கு தேர்வு பயம் முற்றிலும் அகற்றப்படுகிறது. பாடங்கள் மீது மாணவர்களுக்கு முழு ஈடுபாட்டை உருவாக்க முடிகிறது. ஆசிரியர்களும் மாணவர்கள் மீது முழுமையாக கவனம் செலுத்த முடியும்.

இவ்வாறு, இயக்குனர் தேவராஜன் கூறினார்.

No comments: