சென்னை ஐகோர்ட்டால், 15 சதவீதம் கட்டணம் உயர்த்திக்கொள்ள
அனுமதிக்கப்பட்ட, 384 தனியார் பள்ளிகளின் பெயர் பட்டியலை, மெட்ரிக்
பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகள் மட்டுமே, 15 சதவீத கட்டணத்தை
உயர்த்த வேண்டும் எனவும், மற்ற பள்ளிகள் உயர்த்தக்கூடாது எனவும் துறை
தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக, ரவிராஜ பாண்டியன்
இருந்தபோது, அவர் நிர்ணயித்த கட்டணம் போதாது எனக் கூறி, பல்வேறு தனியார்
பள்ளிகள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில், சம்பந்தபட்ட
பள்ளிகள் இடைக்கால நிவாரணமாக, 15 சதவீத கட்டணத்தை உயர்த்தி வசூலித்துக்
கொள்ளலாம் என, ஐகோர்ட் தீர்ப்பு கூறியது. ஆனால், வழக்கு தொடராத பள்ளிகள்
எல்லாம், கூடுதல் தொகை வசூலித்து வருவதாக, மெட்ரிக் பள்ளிகள்
இயக்குனரகத்திற்கு புகார்கள் வந்தபடி இருக்கின்றன.
இதையடுத்து, 15 சதவீத கட்டணம் உயர்த்திக் கொள்ள, ஐகோர்ட்டால்
அனுமதிக்கப்பட்ட, 384 தனியார் பள்ளிகளின் பெயர் பட்டியலை, தனது
இணையதளத்தில்(http://tnmatricschools.com) மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. மாவட்ட வாரியாக, பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில், ரோசரி மெட்ரிகுலேஷன், டி.ஏ.வி., கோபாலபுரம்,
சூளைமேடு பள்ளிகள், அடையாறு செயின்ட் மைக்கேல்ஸ் உட்பட பல பிரபலமான
பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட 74 பள்ளிகள்,
சென்னை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இதேபோல், ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில்,
அதிகமான பள்ளிகள் இப்பட்டியலில் உள்ளன. இதுகுறித்து, இயக்குனரக வட்டாரம்
கூறும்போது, "பெற்றோருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, இணையதளத்தில்
பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்
பெறாத பள்ளிகள், கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து
இயக்குனரகத்திற்கு, பெற்றோர் தகவல் தெரிவிக்கலாம்; மெட்ரிக் பள்ளி
ஆய்வாளர்களிடமும் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றனர்.
No comments:
Post a Comment